திட்டமிட்டபடி நிதியைத் தந்த முதல்வர்.. ஓடோடி வந்து நன்றி சொன்ன விவசாயிகள்:ஆனைமலை நல்லாறு திட்டத்தை கேரளாவுடன் பேசி நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த விவசாயிகள்
ஆழியார் பரம்பிக்குளம் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வரை கோவையில் நேரில் சந்தித்து பாசன விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீலாம்பூர் பகுதியில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதிக்கு முதல்வர் வருகை தந்து தங்கியுள்ளார். இன்று மாலை 4:30 மணி அளவில் அவர் சாலை மார்க்கமாகப் பல்லடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் புறப்பட உள்ளார்.
முன்னதாக, முதல்வர் தங்கியுள்ள விடுதிக்கு வருகை தந்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன சபை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், முதல்வரை நேரில் சந்தித்துத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். கோவை மாவட்ட பரம்பிக்குளம் ஆழியார் பாசனச் சீரமைப்புத் திட்டத்திற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கான அரசாணையை விரைந்து வெளியிட்டமைக்காக விவசாயிகள் முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாசன திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், முதல்வர் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிப் பணிகளைத் தொடங்கியுள்ளதற்குத் தங்களது நன்றியைத் தெரிவித்ததாகக் கூறினார். மேலும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என்றும், பரம்பிக்குளம் மற்றும் காண்டூர் பிரதான கால்வாய் சீரமைப்புப் பணிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வரிடம் முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்