ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புற்றுநோய் தினம் 2026 அனுசரிப்பு.



ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புற்றுநோய் தினம் 2026 அனுசரிப்பு.

சமூக வலைத்தளம் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை துவக்கம்.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் சரக காவல் துணை ஆய்வாளர் டாக்டர் வி. சசி மோகன், ஐ.பி.எஸ். கலந்து கொண்டு, சமூக வலைத்தளம் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்கத்தையும், இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தையும் தொடங்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.முதலாவதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.குகன் வரவேற்றார். உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், புற்றுநோயின் கடுமையான தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது, ஆரம்ப கட்டத்தில்  கண்டறிவது, சிகிச்சையை மேம்படுத்துவைத்து மற்றும் சமூகத் தடைகளை நீக்குவது போன்றவை இதன் முக்கிய நோக்கங்களாகும் எனத் தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் தனித்துவத்தால் ஒன்றிணைவோம் (United by Unique) என்பதாகும். இது மனிதநேய அடிப்படையிலான புற்றுநோய் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், ஒவ்வொருவரின் புற்றுநோய் அனுபவமும் தனித்துவமானது என்பதை உணர்த்துகிறது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகிறது. 2015-ஆம் ஆண்டில் சுமார் 10 லட்சமாக இருந்த பாதிப்பு 2025-ஆம் ஆண்டில் 16 லட்சமாக உயர்ந்துள்ளது.தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பாதிப்பின் படி, 2021-ஆம் ஆண்டில் 1,07,000 புற்றுநோய் பாதிப்புகள்  பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியான தரவுகளில் சென்னை முதல் இடத்திலும், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் அடுத்தடுத்த இடங்களிலும், கோயம்புத்தூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
கோவையில் ஆண்களிடையே அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு காணப்படுகிறது. இதில் வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அடங்கும். பெண்களிடையே மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது.
தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு படி, இந்தியாவில் புற்றுநோய் பரிசோதனை விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை 1.9% மட்டுமே நடைபெறுகிறது; மார்பக புற்றுநோய் பரிசோதனை 0.9% ஆக உள்ளது. தமிழ்நாட்டில், கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை 4.8% மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை 9.8% ஆகும். இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் 70–80% பரிசோதனை இலக்கை விட மிகவும் குறைவாகும்.
புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதை ஆரம்பகாலதிலேயே கண்டறிய உதவக்கூடிய  பரிசோதனைகள் இன்று மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.இந்த இடைவெளியை குறைக்கும் வகையில் “ஆரம்ப கட்ட கண்டறிதல் சிகிச்சைக்கு வழிவகுக்கும்” என்ற செய்தியை முன்னெடுக்கும் வகையில் மார்பக புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட 14 வகையான புற்றுநோய்களை மையமாகக் கொண்டு சமூக ஊடக விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பிப்ரவரி மாதம் முழுவதும் இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை நடத்துவதாகவும், இது தொடர்ந்து 20-ஆவது ஆண்டாக புற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்படும் முயற்சியாகும், என்றார்.நிகழ்ச்சியின் முடிவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பார்கவி நன்றியுரை ஆற்றினார்.இந்த முயற்சிகளின் மூலம், புற்றுநோய் விழிப்புணர்வு, ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பரிசோதனை ஆகியவற்றில் தனது உறுதியான அர்ப்பணிப்பை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி திரு.சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு.டி.மகேஷ்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.எஸ்.ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.எஸ்.அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்