பேரூர் ஆதினம் மடத்தில் இஸ்லாமியருக்கு "மத நல்லிணக்க செம்மல்" விருது - கோவையில் அரங்கேறிய சுவாரஸ்யம்.
கோவை பேரூர் ஆதீனம் மடத்தில் இஸ்லாமியர் ஒருவருக்கு "மத நல்லிணக்க செம்மல்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சுவாரசிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.கோவை சாய்பாபா காலனியில் வசித்து வரும் முகமது ரஃபி. தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராக உள்ள இவர், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல் சமய நல்லுறவு இயக்கத்தை ஆரம்பித்து பல்வேறு நல்லிணக்க பணிகளை செய்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மத நல்லிணக்க பணிகளை மேற்கொண்டு வருகின்ற முகமது ரஃபி அவர்களை அங்கீகரித்து போற்றும் வகையில், பேரூர் ஆதீனம் மடத்தில் உள்ள மருதாசல அடிகளார், முகமது ரஃபி அவர்களுக்கு "மத நல்லிணக்க செம்மல்" விருது வழங்கி கெளரவித்து நெகிழ்ந்துள்ளார். விருது வழங்கியது குறித்து பேசிய மருதாச்சல அடிகளார், பேரூர் மடத்தின் முன்னாள் மாணவர் முகமது ரஃபி மத நல்லிணக்கத்திற்காக பாடுபடுவது போற்றத்தக்கது என தெரிவித்தார். வருடம் தோறும் அனைத்து மதத்தவரையும் ஒன்றிணைத்து மடத்தில் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவை முகமது ரஃபி நடத்தி நல்லிணக்கம் பேணுவதாக தெரிவித்த அடிகளார், இதுபோன்று அனைத்து மத விழாக்களையும் நடத்தி ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதால், மத நல்லிணக்க செம்மல் விருதை முகமது ரஃபி அவர்களுக்கு வழங்கி கௌரவிப்பதாக நிகழ்ச்சியுடன் தெரிவித்தார்.விருது பெற்ற முகமது ரஃபி பேசும்போது, நாட்டில் சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கி, சமாதான சுகவாழ்வு பெற்று அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார். அதற்காகவே இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தைச் சார்ந்த பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து "பல் சமய நல்லுறவு இயக்கம்" என்ற நல்லிணக்க அமைப்பை கட்டமைத்து களப்பணியாற்றுவதாக தெரிவித்தார். வேற்றுமையில் ஒற்றுமை நமது நாட்டின் பலம் என தெரிவித்த முகமது ரஃபி, அன்பை மட்டுமே அனைத்து மதங்களும் உணர்த்துவதாகவும், அந்த அன்பை பரிமாறி மத நல்லிணக்கத்தோடு அனைவரும் சமூகத்தில் இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த 15 ஆண்டுகளாக பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் என அனைத்து பண்டிகைகளையும் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மத நல்லிணக்க விழாக்களாக கொண்டாடி வருவதாக தெரிவித்த அவர், நல்லிணக்க கலாச்சாரம் நாடு எங்கும் வியாபிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராக உள்ள முகமது ரஃபி, மத நல்லிணக்க செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்