நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டி: 26 பதக்கங்களை வென்று கோவை மாணவர்கள் சாதனை
நேபாள நாட்டில் கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில் பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு (SGADF) சார்பில் இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, நேபாளம், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
இந்திய அணியின் சார்பில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 22 வீரர்கள் சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது அபார திறமையை வெளிப்படுத்தினர். சிலம்பப் போட்டியில் 25 தங்கப் பதக்கங்களையும், 5 வெள்ளிப் பதக்கங்களையும் வென்ற கோவை வீரர்கள், யோகா போட்டியில் ஒரு தங்கம் என மொத்தம் 26 தங்கப் பதக்கங்களை வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற வீரர்களை பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சிவம் தாக்கூர் மற்றும் இந்திய அணியின் கவுண்டி பிஸ்டல் ஷூட்டரும், தமிழ்நாடு செயலாளருமான முத்துராஜ் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
சாதனை படைத்த வீரர்களும், அவர்களுக்குப் பயிற்சியளித்த வினோத் குமார், வெங்கடேஷ் மற்றும் பாண்டீஸ்வரி ஆகியோர் ரயில் மூலம் கோவை வந்தடைந்தனர். கோவை வந்தடைந்த வீரர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்த மாணவர்களின் சாதனை கோவையில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்