ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா : 125 ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி.

கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயத்தில், புனித வின்சென்ட் தே பவுல் சபையுடன் இணைந்து, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா  வெகு விமரிசையாக நடைபெற்றது. இது இவ்வாண்டுடன் 4-வது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெறுகிறது.
நடப்பு கல்வியாண்டிற்காக 150 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றின் பொருளாதாரப் பின்னணி மற்றும் தேவைகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மிகவும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலில் உள்ள 125 மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்கான நிதி, புனித அருளானந்தர் ஆலய இறைமக்களின் காணிக்கைகள், புனித வின்சென்ட் சபையினரின் பங்களிப்பு மற்றும் மனமுவந்த உபகாரிகளின் உதவியுடன் திரட்டப்பட்டது.இந்த நிகழ்வைச் சிறப்பாக வழிநடத்திய புனித அருளானந்தர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ததேயு பால்ராஜ் அடிகளார் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்பணி அருள் இருதயராஜ் அடிகளார் ஆகியோருக்கு சபையினர் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனித வின்சென்ட் தே பவுல் சபையின் தலைவர் சகோ. ராஜேஸ், துணைத்தலைவர் சகோ. பிரதாப், செயலாளர் சகோதரி சுகுனாமேரி, பொருளாளர் சகோ. அருள்ராஜ், மூத்த உறுப்பினர் சகோ. சாமுவேல் மற்றும் இவ்விழாவின் பொறுப்பாளர் சகோ. சகாய ஆரோக்கிய முத்து தலைமையிலான குழுவினர்  செய்திருந்தனர். புனித அருளானந்தர் கிளைச்சபையின் கீழ் இயங்கும் புனித வின்சென்ட் தே பவுல் சபை, கடந்த 33 ஆண்டுகளாக மதங்களைக் கடந்து பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 குடும்பங்களைத் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான மாத மளிகைப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
மேலும், ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, திருமண உதவிகளை வழங்குவதுடன், அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து இரத்ததான முகாம்களை நடத்துதல் மற்றும் ஆதரவற்ற நிலையில் உயிரிழப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு உதவிகளைச் செய்தல் உள்ளிட்ட பல மகத்தான பணிகளைச் சபை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்