கோவைகோவை சிஐடி கல்லூரியில் சர்வதேச தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்ப மாநாடு தொடக்கம்.

கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நார்வேயின் மேற்கு நார்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தூய்மை எரிசக்தி மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள் தொடர்பான 4வது சர்வதேச மாநாடு (AMCEHA 2026) புதன்கிழமை சிஐடி வளாகத்தில் தொடங்கியது.ஜூன் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, நார்வே, இலங்கை, தென் கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று, பொருட்கள் அறிவியல், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் சுகாதாரப் பயன்பாடுகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.
மாநாட்டை இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR) இயக்குநர் ஜெனரல் டாக்டர் என். கலைச்செல்வி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார்.
தொடக்க நிகழ்ச்சிக்கு சிஐடி கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் திரு ஆர். சந்தோஷ் மற்றும் நார்வேயின் HVL பல்கலைக்கழக ரெக்டர் பேராசிரியர் குன்னார் யிட்ரி ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடி முதல்வர் டாக்டர் அ. ராஜேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.மாநாடு குறித்த அறிமுக உரையாற்றிய AMCEHA 2026 மாநாட்டு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளருமான, HVL பல்கலைக்கழக இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பப் பேராசிரியர் டாக்டர் தயாளன் வேலாயுதப்பிள்ளை, கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். HVL தற்போது இந்தியாவில் ஒன்பது கல்வி நிறுவனங்களுடனும், இலங்கையில் ஐந்து கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். எதிர்கால எரிசக்தி சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்றும், இந்தியா – நார்வே ஆராய்ச்சி கூட்டாண்மைகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தலைமையுரையாற்றிய திரு ஆர். சந்தோஷ், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை முன்னெடுப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை வலியுறுத்தினார்.
வாழ்த்துரையாற்றிய பேராசிரியர் குன்னார் யிட்ரி, சிஐடி மற்றும் HVL இடையேயான கூட்டாண்மை கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய நார்வே பயணத்தை குறிப்பிட்ட அவர், இதுபோன்ற முயற்சிகள் இந்தியா – நார்வே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றார்.சிஎஸ்ஐஆர் – தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CSIR-NIIST) இயக்குநர் டாக்டர் ஆனந்தராமகிருஷ்ணன், டாக்டர் கலைச்செல்வியின் லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்தில் ஆற்றிய முன்னோடி பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். மேலும், சென்னை அருகே இந்தியாவின் முதல் லித்தியம் செல்கள் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
சிஐடி மற்றும் சிஐடி சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைமை கல்வி அலுவலர் டாக்டர் என். ஆர். அலமேலு வாழ்த்துரையாற்றுகையில், ஆராய்ச்சிகள் மாற்றத்தை உருவாக்கக்கூடியதாகவும், தீர்வுகளை வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றார். குறிப்பாக பசுமை எரிசக்தி தொடர்பான சவால்களுக்கு தீர்வு காண சர்வதேச மற்றும் பல்துறை ஒத்துழைப்புகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கான நார்வே தூதரகத்தின் வணிக ஆலோசகரும், இந்தியாவிற்கான கன்ட்ரி டைரக்டருமான பியோர்ன் ஐவர்சன் வாழ்த்துரை வழங்கினார்.அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி. ரவி பேசுகையில், இத்தகைய மாநாடுகள் ஆராய்ச்சியை மட்டுமல்லாமல், வலுவான நிறுவன ஒத்துழைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்றார். மாணவர்கள் தரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடக்க உரையாற்றிய டாக்டர் என். கலைச்செல்வி, தற்போதைய உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார். மேம்பட்ட பொருட்கள் மற்றும் உலோகங்கள் மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் இடம்பெற்றுள்ளதுடன், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
‘விக்சித் பாரத்’ என்ற வளர்ந்த இந்தியா இலக்கை குறிப்பிட்ட அவர், உலகளாவிய அறிவியல் முன்னேற்றத்திற்கு இந்தியா தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி வருவதாக தெரிவித்தார். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சமூக நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
நார்வேயின் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் நிலையான எரிசக்தி துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பாராட்டிய அவர், இயற்கை ஹைட்ரஜன் எனப்படும் ‘வெள்ளை ஹைட்ரஜன்’ குறித்த ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துமாறு இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தார். பசுமை ஹைட்ரஜன் முயற்சிகளுக்கு துணைபுரியும் வகையில் வெள்ளை ஹைட்ரஜன் எதிர்கால எரிசக்தி சவால்களுக்கு தீர்வாக அமையக்கூடும் என்றும் அவர் கூறினார். மேலும், ஆராய்ச்சியின் சமூக மற்றும் உலகளாவிய தாக்கத்தை உணர்ந்து மாணவர்கள் ஆராய்ச்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆரின் பல்வேறு தேசிய ஆய்வகங்களின் இயக்குநர்கள், HVL பல்கலைக்கழக பேராசிரியர்கள், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் துறை பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.தொடக்க நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ஆராய்ச்சி, புதுமை மற்றும் கல்வி பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நோக்கில் HVL மற்றும் CSIR இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.மாநாட்டின் முக்கிய நிகழ்வாக “Lab-to-Fab: Translating Advanced Materials into Industry” என்ற தலைப்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதில் தொழில் துறை தலைவர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் புதுமை அமைப்புகள் பங்கேற்று அறிவியல் கண்டுபிடிப்புகளை தொழில்துறை மற்றும் சமூகப் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கின்றனர்.
மேலும், “Innovation to Product: Building Global Ecosystems for Clean Energy Technologies” என்ற தலைப்பில் உலகளாவிய தலைமைத்துவ கலந்துரையாடலும் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நார்வே, இலங்கை மற்றும் தென் கொரியா நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் புதுமை சூழல்கள், பல்கலைக்கழகம் – தொழில் துறை ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் எதிர்கால சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் புதுமையாளர்களுக்கான Innovator Showcase 2026 நிகழ்ச்சியும் மாநாட்டின் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. இதில் தூய்மை எரிசக்தி, மேம்பட்ட பொருட்கள் மற்றும் சுகாதாரத் துறைகளில் உருவாக்கப்பட்ட புதிய யோசனைகள், மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. சிறந்த புதுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, ஆராய்ச்சி முடிவுகளை சமூகப் பயன்பாட்டிற்கான தீர்வுகளாக மாற்ற ஊக்குவிக்கப்படுகிறது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்